“களத்தில் எதிரிகள், வெளியில் நண்பர்கள்; ஏனெனில் நாங்கள் பஞ்சாபிகள்”

--

லாகூர்: “விராத் கோலியின் காலத்தில் நான் ஆடியிருந்தால், அவரை களத்தில் அதிகம் சீண்டியிருப்பேன்; அதேசமயம் நாங்கள் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்திருப்போம். ஏனெனில் நாங்கள் இருவரும் பஞ்சாபிகள்” என்றுள்ளார் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர்.

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், ஒருகாலத்தில், உலகின் நம்பர்-1 வேகப்பந்து வீச்சாளர் என்று அறியப்பட்டவர். அவர் கூறியுள்ளதாவது, “நானும் விராத் கோலியும் பஞ்சாபிகள். எனவே, களத்திற்குள் வைரிகளாக இருந்திருந்தாலும், வெளியே சிறந்த நண்பர்களாக இருந்திருப்போம்.

அவருக்கு பந்து வீசுகையில், என் பந்தில் கட் ஷாட் மற்றும் ஃபுல் ஷாட்டெல்லாம் ஆட முடியாது என்று சீண்டியிருப்பேன். ஆனால், எதிரணியினர் அவரை சீண்டும்போது, அவரின் கவனம் அதிகரிப்பதுதான் ஆபத்து.

என் வேகத்தில், அவருக்குப் பிடித்தமான டிரைவ் ஆட வைத்தே, அவரை வீழ்த்தியிருப்பேன். ஆனால், என் காலத்தில் அவர் ஆடியிருந்தாலும், இதேயளவு ரன்களை அவர் எட்டியிருப்பார்.

வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷேன் வார்ன் ஆகியோருக்கு எதிராக கோலி ஆடியிருக்க வேண்டுமென்பது எனது விருப்பம். கோலிக்கும் அந்த சவால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதே எனது எண்ணம்” என்றுள்ளார் அக்தர்.