” உண்மையோ, பொய்யோ… இனிப்போ, கசப்போ… எங்களால் எந்த ஒரு செய்தியையும் வைரலாக்க முடியும் ” – அமித் ஷா

” உண்மையோ, பொய்யோ நம்மால் எந்த ஒரு செய்தியையும் வைரலாக்க முடியும் “ என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொண்டர்களிடையே பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் தன்னார்வலர்கள் மூலம் எந்த ஒரு செய்தியையும் எங்களால் தொடர்ந்து பரப்ப முடியும் என அமித் ஷா பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

amith

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சமூக வலைதளங்களில் ஈடுபடும் பாஜக தொண்டர்களுக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சமூக வலைதளத்தை சேர்ந்த பாஜக தொண்டர்களிடையே பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் பேசும்போது, “ உண்மையோ, பொய்யோ… இனிப்போ, கசப்போ … நம்மால் எந்த ஒரு செய்தியையும் இணையத்தில் வைரலாக்க முடியும் “ எனக் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், இணையத்தில் ராகுல் காந்தியை பின்பற்றுபவர்கள் எல்லாம் வெளிநாட்டவர்கள். அவர்களுக்காக பயப்பட தேவையில்லை. சமூக வலைதளம் முதல் மாநிலம் மற்றும் தேசிய அளவில் நாமது ஆட்சி நடைபெற்று வருகிறது. நாம் ஏற்கெனவே உத்திரப்பிரதேச மாநிலத்தில் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் குரூப்பில் கிட்டத்தட்ட 32 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்த குரூப்பில் தினமும் காலை எட்டு மணி முதல் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

உத்திரப்பிரதேச தேர்தலுக்கு முன்பு பாஜக சார்பில் இரண்டு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டது. ஒரு குரூப்பில் 15 லட்சம் பேரும், மற்றொரு குரூப்பில் 17 லட்சம் பேரும் என மொத்தம் 31 லட்சம் பேர் இணைக்கப்பட்டனர். தினமும் காலை 8 மணிக்கு ” அறிவோம் உண்மை “ என்று செய்திகள் பகிரப்படும். செய்தித்தாள்களில் தவறான செய்திகள் வந்திருந்தால் அது இந்த குரூப்பில் பகிரப்பட்டு வைரலாக்கப்படும். எந்த செய்தித்தாளில் யாரால் இப்படி தவறான செய்தி எழுதப்பட்டது என்றும், அது யாரை சார்ந்தது என்றும் பகிரப்பட்டு வருகிறது. இதனால் ஊடகங்கள் சரியான செய்திகளை பரப்புகின்றன.

சமூக வலைதளங்களில் ஈடுபடும் எங்கள் தொண்டர்கள் மிகவும் புத்திசாலிகள். ஒரு செய்தியை ஆரம்பம் முதல் இறுதி வரை துல்லியமாக பதிவிடுவதில் வல்லவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் குறித்த சர்ச்சை. கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் இருக்கும் தொண்டர் இந்த செய்தியை பதிவிட்டு, பகிர்ந்துள்ளார். அகிலேஷ் குறித்த தகவல் தொடர்ந்து எங்களால் வைரலானது. நாங்கள் 32 லட்சம் பேர் கொண்ட குரூப்பை வைத்துள்ளோம். இது ஒன்றே போதும், நாங்கள் யார் என்று கூறுவதற்கு. எனவே இனிப்போ, கசப்போ எங்களால் எந்த ஒரு செய்தியையும் வைரலாக்க முடியும் “ என்று கூறியுள்ளார்.