பெட்ரோல் விலையை குறைக்க அரசுக்கு உத்தரவிட முடியாது : நீதிமன்றம் கைவிரிப்பு
டில்லி
பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அரசுக்கு உத்தரவிடமுடியாது என டில்லி உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து புது புது உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் துயரத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் நிலியும் உள்ளது. அரசு கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் என கூறுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறையவில்லை.
இந்நிலையில் பூஜா மகாஜன் என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவும் ஒரு நிலையான விலையை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி கே ராவ் ஆகியோரின் அமர்வு விசாரித்தது
நேற்று இந்த மனுவின் விசாரணையின் போது டில்லி உயர்நீதிமன்ற அமர்வு, “பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றுவது என்பது அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவாகும். தற்போது பொருளாதாரத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால் அரசின் கொள்கை முடிவு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தானே ஒரு முடிவு எடுக்க வேண்டும். உயர்நீதிமன்றம் இது குறித்து உத்தரவிட முடியாது” என தெரிவித்துள்ளது.