டில்லி

நாட்டின் நலனுக்காக வெளியிட முடியாத ரஃபேல் விவரங்களை ராகுல் காந்தியின் திருப்திக்காக வெளியிட முடியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

மத்திய அரசு விமானப் படைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் பல முறைகேடுகள்  நடந்ததாகவும் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.    நடந்து முடிந்த தேர்தல்களில் இது குறித்து காங்கிரஸ் கடுமையாக பாஜக அரசை விமர்சித்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியிடம் பிரான்ஸ்  ரஃபேல் விமான விவரங்களை வெளியிட தமது அரசு தயாராக உள்ளதாகவும்  இந்தியா அதனை வெளியிடக் கூடாது எனக் கூறியதால் வெளியிட வில்லை எனவும் தெரிவித்தது.  இது சர்ச்சையை மேலும் அதிகமாக்கியது.   இந்நிலையில் நேற்று இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு நிர்மலா சீதாராமன், “ராகுல் காந்தி இந்த அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டை கூற வேண்டும் என்பதற்காக பல முறைகளில் முயற்சித்தார்.   ஆனால் அது நிறைவேறாததால் தற்போது ரஃபேல் விவகாரத்தை எடுத்துள்ளார்.  விமானப் படைக்கான போர் விமானங்கள் வாங்குவது இரு நாடுகளுக்கிடையே ஆன அரசு சம்பந்தப்பட்ட நடவடிக்கை.

இந்த விஷயங்களை வெளியே கூறுவது முடியாத காரியம்.    அதை தெரியப்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கே கேடு விளைவிக்கும்.   நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவித்து ராகுல் காந்தியை திருப்தி படுத்த முடியாது.   எனவே இந்த விவரங்களை வெளியிடும் பேச்சுக்கே இடமில்லை“ என திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.