சிட்னி: ஆஸ்திரேலிய அணியால், நாங்கள் அனைத்து விதங்களிலும் முறியடிக்கப்பட்டோம் என்று தோல்விக்குப் பிறகு, சம்பிரதாயமாக முழங்கியுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோற்றதன் மூலம், தொடரை இழந்தது இந்திய அணி. அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

இந்நிலையில், தோல்வி குறித்து புலம்பியுள்ள கேப்டன் கோலி, “நாங்கள் அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலியர்களால் தோற்கடிக்கப்பட்டோம். எங்களின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. அதில், தேவையான மாறுபாடுகள் இல்லை. அதேசமயம், சூழலையும், தன்மையையும் நன்கு உணர்ந்தவர்களாக இருந்தனர் அவர்கள்.

நாங்கள் தயங்காமல் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இலக்கை எட்டுவது சாத்தியமாகியிருக்கும். எப்படியிருந்தாலும், இந்த வெற்றிக்காக ஆஸ்திரேலியர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நானும், ராகுலும் 40 அல்லது 41வது ஓவர்கள் வரை களத்தில் நின்றிருக்க வேண்டும். கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் தேவைப்பட்டிருந்தால், அது சாத்தியமான ஒன்றாக இருந்திருக்கும்” என்றுள்ளார் கோலி.