லண்டன்: எங்களுக்கு அல்லாவின் துணை இருந்ததாலேயே உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.

“அல்லா எங்களுக்கு துணையிருந்தார். நான் எங்கள் அணி உறுப்பினர் அடில் ரஷீத்திடம் பேசினேன். அல்லா நிச்சயமாக நமக்குத் துணையிருந்தார் என்று அவர் கூறினார்” என்றார் மோர்கன். அவரின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்ததா? என்று கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார் மோர்கன்.

இங்கிலாந்து ‍அணி ஒரு கலவையான அணி. அதன் கேப்டன் மோர்கன் அயர்லாந்திலிருந்து வந்தவர். அடில் ரஷீத் மற்றும் மொயீன் அலி ஆகியோர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். ஜேஸன் ராய்க்கு 10 வயதாக இருக்கையில், அவரின் குடும்பம் தென்ஆப்ரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தது. முக்கியப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸில் பிறந்தவர். தனது 18 வயதை பூர்த்திசெய்த பின்னர் இங்கிலாந்தை சொந்த நாடாக வரித்துக் கொண்டவர்.

“நாங்கள் பலரும் பலவிதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். இதனால், நாங்கள் இணைந்திருக்கும்போது அந்த இடத்தின் சூழலே அற்புதமான இருக்கும்” என்றார் மோர்கன்.

இங்கிலாந்து அணி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது என்பது நினைவிருக்கலாம்.