சென்னை:

போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் போராட்டம், தகுந்த நடவடிக்கைகள்  மூலம் முறியடிக்கப்படும் என்று  போக்குவரத்துத் துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கள் இன்று இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.. பல்லவன் இல்லத்தில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  இதையடுத்து  பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “ கடந்த இருபது வருடங்கலாக நிலுவையில் இருக்கும் தொழிலாளர்களின் வைப்புத் தொகையை உடனே கேட்பது சரியல்ல. தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மொத்தம் இருக்கும் 47 தொழிற்சங்கங்களில் 37 தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 10 தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் வரை போராட்டத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.  அதற்கும் 10 தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் வேண்டுமென்றே நொண்டிச் சாக்கு கூறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே 750 கோடி ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. .

மேலும் 500 கோடி ரூபாய் தருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை புரிந்து கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றார்.

மேலும், “மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் தவிர்கக தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகப்படியான மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்குவதை தடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆம்னி பேருந்துகள் அதிகமான கட்டணம் வசூலித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்”  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.