பத்து நாட்களில் செய்ய வேண்டியதை இரண்டு நாட்களில் செய்தோம் : ராகுல் காந்தி

டில்லி

விவசாயக்கடன்களை 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக சொன்ன காங்கிரஸ் இரண்டு நாட்களில் தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருந்தது.   இந்நிலையில் 5 சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் விவசாயக்கடன்களை 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

காங்கிரஸ் 5 சட்டப்பேரவைகளில் 3 சட்டப்பேரவைகளில் ஆட்சி அமைத்தது.    பாஜக தோல்வி அடைந்ததற்கு விவசாயக் கடன் குறித்து அந்த கட்சி அக்கறை கொள்ளாதது முக்கிய காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.   சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசுகள் பதவி ஏற்ற உடன் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தன.   அதைக் கண்ட பாஜக ஆளும் குஜராத் மற்றும் அசாம் மாநில முதல்வர்களும் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.    இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக முதல்வர்கள் விழித்து கொண்டதாகவும் பிரதமர் உறங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நாங்கள் முடித்து விட்டோம்.  ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.  நாங்கள் 10 நாட்களில் செய்வதாக சொன்னதை 2 நாட்களில் செய்துள்ளோம்” என பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி