ஐபிஎல் நடத்த விருப்பம் தெரிவிக்கவில்லையாம்..! நியூசிலாந்து மறுப்பு

வெலிங்டன்: இந்தாண்டு ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து விருப்பம் எதனையும் வெளியிடவில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் 13வது சீசன் இந்தியாவில் இந்தாண்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. பிசிசிஐ தரப்பில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த இயலவில்லை என்றால், தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அழைப்பு விடுத்தன.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியை நடத்த, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அச்செய்திக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் கூறியதாவது, “ஐபிஎல் தொடரை எங்கள் நாட்டில் நடத்துவது குறித்து, விருப்பம் தெரிவித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நாங்கள் யாரும் பேசவில்லை. இது முற்றிலும் மீடியா யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தி” என்றுள்ளார்.