வாஜ்பாயை அவமதிக்கவில்லை:   நடிகர் சங்கம் விளக்கம்

டிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்த சர்ச்சைக்கு நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்தாதக நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பணிகள் முடியும் வரை அடுத்த 6 மாதங்களுக்கு தேர்தல் இல்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.


இதற்கிடையே நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவில்லை என புது சர்ச்சை எழுந்தது.

நடிகர் எஸ்.வி.சேகர், “நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு)மறைந்த பல கலைஞர்களுக்கும்,முன்னாள் முதல்வருக்கும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத்தெரியவில்லை. இது அறியாமையா  . அகந்தையா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.  

அதே போல பாஜக தமிழக தலைவர்  தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “ நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே பாரத முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது”  என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டு குறித்து  நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் உதயா விளக்கம் அளித்தார்.

அவர், “ வாஜ்பாய் சிறந்த தேசிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். கருணாநிதி நடிகர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர். அதனால் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று எந்த உறுப்பினரும் கோரிக்கை விடுக்கவில்லை. நடிகர் சங்கத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.