“ரூ. 700 கோடி தர்றதா நாங்க சொல்லவே இல்லியே!”: : அமீரகம் விளக்கம்

கேரள வெள்ள நிவாரணத்துக்காக தாங்கள் ரூ.700 கோடி தருவதாக எப்போதுமே அறிவிக்கவில்லை என்று ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து, பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. பிற மாநிலங்கள், மத்திய அரசு, தனியார் அமைப்புகள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர்.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக மன்னர் அதிபர் சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் தமது நாடு, கேரளாவுக்கு ரூ.700 கோடி ரூபாய் நிதி அளிக்கும் என்று அறிவித்ததாக செய்தி பரவியது. இதை கேரள முதல்வர் பினராயி விஜயனும் வரவேற்றார். பிரதமர் மோடியும் அமீரகத்துக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் இந்திய அரசின் கொள்கை முடிவின்படி, வெளி நாட்டு உதவிகளை அனுமதிக்க முடியாது என மத்திய அரசு மறுத்து விட்டதாக தகவல் பரவியது.

சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் – கேரள வெள்ளம்

இதையடுத்து, 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்கலாம்.  மற்ற நாடுகள் நல்லெண்ணத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகம் தரும் ரூ.700 கோடி உதவியை தடுக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்நிலையில் ரூ.700 கோடி தருவதாக எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐக்கிய அரசு அமீரகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் இந்திய தூதர் அமகது அல்பன்னா இதுகுறித்து, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.  அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நிதித்தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.