ஷென்சேன்

அமெரிக்காவின் வர்த்தகம் தேவை இல்லை என சீனாவின் பிரபல மொபைல் நிறுவனமான வாவே (Huawei) அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது இணையச் சேவை 4 ஜி தொழில்நுட்பத்தில் வழங்கப்படுகிறது.   கடந்த 1 ஆம் தேதி முதல் சீனாவில் 5 ஜி தொழில்நுட்ப இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இது 4 ஜி தொழில் நுட்பத்தை விட 10 முதல் 100 மடங்கு வரை  அதிக பதிவிறக்க வேகத்தைக் கொண்டதாகும்.   இந்த சேவை சீனாவில் பீஜிங், ஷாங்காய், உள்ளிட்ட 50 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த 5 ஜி வசதிக் கொண்ட மொபைல்களை வாவே (Huawei) உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்து விற்பனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நிகழ்ந்து வருவது தெரிந்ததே.   உலகின் மிக அதிக மொபைல் உற்பத்த்தி நிறுவனங்களில் ஒன்றான வாவே (Huawei)  நிறுவனமும் இந்த வர்த்தகப் போரில் பாதிப்பு அடைந்துள்ளது. கடந்த மே மாதம் அமெரிக்க அரசு இந்த நிறுவனத்துக்கு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து மென்பொருள் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை இந்நிறுவனம் சுமார் 11 லட்சம் கோடி டாலருக்குக் கொள்முதல் செய்தது.  தற்போது இந்த நிறுவனம் தனக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை தானே தயாரித்து வருகிறது.   தற்போது அமெரிக்கத் தொழில்நுட்பம் இல்லாமலே வாவே (Huawei) நிறுவனம் 5 ஜி மொபைல்கலை தயாரித்துள்ளது.

இது குறித்து வாவே (Huawei)  நிறுவன தலைமை அதிகாரி ரென் ஸெங்க்ஃபீ, “அமெரிக்க வர்த்தகம் இல்லாமலே எங்களால் பிழைக்க முடியும்.  எங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எவ்வித வர்த்தகத் தொடர்பும் கிடையாது.    எங்களுக்கு அமெரிக்க வர்த்தகம் தேவை இல்லை.  அதே வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிரி இல்லை. அவர் இப்போதோ அல்லது பதவிக் காலத்துக்குப் பிறகோ எங்களை சந்திக்க விரும்பினால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.