ரஜினியை கிண்டல் செய்யவில்லை!: தாதா 87 பட இயக்குநர் விளக்கம்

விஜய்ஸ்ரீ இயக்கிவரும் தாதா  87 படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம்.. படத்தின் ஹீரோ, சாருஹாசன்!  இவருக்கு தற்போது 87 வயது ஆகிறது.. இந்த நிலையில் இவரை நாயகனாக்கி.. அவரது வயதைக் குறிக்கும் வகையில் “தாதா 87” என்றே பெயரும் வைத்திருக்கிறார்கள்.

தாதா 87 படத்தில் சாருஹாசன்

சாருஹாசன்.ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கிறார்.

மேலும், நீண்ட காலத்துக்குப் பிறகு ஜனகராஜூம் நடிக்கிறார்.

இந்த நிலையில் அதிரடியாக இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்தப் பாடல்தான் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சமீபத்தில், “உங்கள் கட்சிக் கொள்கை என்ன” என்று செய்தியாளர் ஒருவர் ரஜினியை கேட்க.. இது குறித்து பின்னர் தெரிவித்த ரஜினி.. “கொள்கை என்னன்னு கேட்டவுடனே ஒரு நிமிசம் எனக்கு தலை சுத்திருச்சு” என்று பேட்டி அளித்தார்.

இதையடுத்து அவரை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தார்கள்.

இந்த நிலையில், “தாதா 87” படத்தில் “ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு” என்று ஒரு பாடல் இடம் பெறுகிறது.

“இது ரஜினியை கிண்டல் செய்வதற்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமலின் அண்ணன் சாருஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். ஆக வேண்டுமென்றே ரஜினியை கிண்டல் செய்ய இந்தப்பாடலை வைத்திருக்கிறார்கள்” என்று ரஜினி ரசிகர்களிடமிருந்து முணுமுணுப்பு எழுந்துள்ளது.

இது குறித்து patrikai.com இதழிலும் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இயக்குநர் விஜய்ஸ்ரீ

இந்த நிலையில் தாதா 87 படத்தின் இயக்குநர் விஜய்ஸ்ரீ patrikai.com இதழிடம் பேசினார். அப்போது அவர், “வழக்கமான படங்களைப்ப ல இல்லாமல் வித்தியாசமாக படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என் முதல் படத்திலேயே 87 வயதாகும் பழம்பெரும் நடிகர் சாருஹாசானை நாயகனாக்கி படம் எடுக்கிறேன். இதற்கு ஒப்புதல் தெரிவித்த தயாரிப்பாளர் கலை சினிமாஸ் அதிபர் எம். கலைச்செல்வனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றவர், “குறிப்பிட்ட பாடலைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன்,  பலரும் இது ரஜினியை கிண்டல் செய்வதாக இருக்குமோ என்றும், ரஜினியை வைத்து விளம்பரம் தேடுகிறார்களா என்றும் விமர்சித்தனர். ஆனால் உண்மை அது அல்ல.

படத்தில் வரும் இன்னொரு நாயகன் இந்தப் பாடலைப் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ற சூழல் கதையில் உள்ளது. அதனால்தான் குறிப்பிட்ட வரிகளில் பாடல் அமைத்தோம். இந்த மாத இறுதியில் படம் வெளியாகிறது. படத்தைப் பார்த்தால் நான்  சொல்வது புரியும்” என்ற  இயக்குநர் விஜய்ஸ்ரீ, “மற்றபடி இது முழுக்க முழுக்க அரசியல் படம்தான்” என்றும் பஞ்ச் வைத்து முடித்தார்..

இந்த நிலையில், “நான் பேசாம இருக்கிறதா கடவுளும் இல்லை.. பேசுறதால மனுசனும் இல்லை” என்ற கேப்சனோடு நேற்று தாதா 87 படத்தின் போஸ்டர் சென்னை முழுதும் ஒட்டப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் கற்பிக்கப்போகிறார்களோ?