மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்! ஜனாதிபதி ஆட்சி வர விருப்பமில்லை! சத்தமின்றி காய் நகர்த்துகிறதா காங்.?

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் கூறியிருக்கிறார்.

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக நிராகரித்து இருக்கிறது. இதையடுத்து, 2வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்திருக்கிறார்.

இந் நிலையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இது குறித்து கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பர். தலைமையின் அறிவுரையை பெற்று, அதன்படி மாநிலத்தின் எதிர்கால அரசியலை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிப்போம்.

மாநிலத்தின் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக பார்த்து வருகிறோம். அது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறது. எங்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பதை பரிசீலிப்போம். இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

பாஜக ஆட்சியமைக்க விருப்பமில்லை என்று அறிவித்திருந்த நிலையில், சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி வர விருப்பமில்லை என்பதால், காங்கிரசின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.