சிலை வேண்டாம்.. நூலகம்தான் வேண்டும்!: ஜேஎன்யு பல்கலைக்கு பாடம் எடுக்கும் மாணவர்கள்

--

ஜேஎன்யு  நிர்வாகம், பல்கலைக் கழக வளாகத்தில் விவேகானந்தரின் முழு உருவ சிலை அமைக்க  தீர்மானித்துள்ளது. இதை பல்கலைக் கழக ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜேன்யு பல்கலை வளாகத்தில் விவேகானந்தர் சிலை அமைக்க நிர்வாகம் முடிவெடுத்தது. கடந்த வருடம் ஜூன் மாதம் ஜேஎன்யு செயற்குழு கவுன்சில் இதற்கு  ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.  தற்போது, சிலை அமைக்கும்   பணிகளை மேற்பார்வையிட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நூலகம் அமைத்து பல்கலைக் கழகத்தை மேம்பாடு அடைய செய்வதற்கு பதிலாக சிலை அமைக்க பணத்தை செலவிடுவது தவறு என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிலை அமைப்பதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்று மாணவர் அமைப்பினர்  கேள்வி எழுப்பினர். இதற்கு பல்கலைக் கழகம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, சிலைக்கான நிதி குறித்த தகவலை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவர் சாய் பாலாஜி, “நூலகம் அமைக்க நிதி இல்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்தது. நூலகத்திற்கான நிதியை 8 கோடி ரூபாயில் இருந்து ரூ1.7 கோடியாக குறைத்துவிட்டது. மேலும் மாணவர்களுக்கு மெரீட் உதவித் தொகை வழங்கவும் நிதி இல்லை என்கிறது. ஆனால், சிலைகள் அமைப்பதில் ஆர்வம்காட்டுகிறது” என்றார்.

இதுகுறித்து  இன்று பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலை அமைக்க தன்னார்வலர்கள் பணம் அளிக்க முன் வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  நூலகத்திற்கான நிதி எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் நிதி கேட்டு யுஜிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“நமது முன்னோடிகளுக்கு சிலை வைத்து பணத்தை வீணாக்குவதைவிட, அவர்களது கருத்துக்களை மக்களிடம் பரப்ப அந்த தொகையை செலவு செய்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதை மாணவர்கள் ஜேஎன்யு பல்கலைக்கு கற்பிக்கிறார்கள்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

#statues #libraries #students #teaching #JNU