கஜா புயலால் பாதிப்பு: மக்களின் வலியை நேரில் உணர்ந்தோம்! டேனியல் ரிச்சர்டு

சென்னை:

ஜா புயலால் எற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட மக்களின் வலியை நேரில் கண்டு  உணர்ந்தோம் என்று மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறி உள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ள கஜா புயல் காரணமாக வரலாறு காணாத சேதத்தை தமிழகம் கண்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய  டேனியல் ரிச்சர்ட்  தலைமையில் மத்திய குழுவை மோடி அரசு அனுப்பி வைத்தது.

இந்த குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தது. குழுவுக்கு மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமை வகித்தார். அவருடன் ஆர்.பி.கவுல், பி.கே.ஸ்ரீவஸ்தவா, மாணிக்க சந்திர பண்டித், வந்தனா சிங்கால் மற்றும் இளவரசன் உள்பட 7 அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

அதையடுத்து கடந்த சனிக்கிழமை காலை  முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிவிடடு பிற்பகல்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ஆய்வு நடத்தியது.

இதையடுத்து சென்னை திருப்பிய மத்திய குழுவினர், பிற்பகல் முதல்வர் எடப்பாடியை தலைமை செயலகத்தில் மீண்டும் சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து,  ஆய்வின்போது மக்களின் வலியை நேரில் உணர்ந்தோம்  என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  முடிந்த அளவுக்கு கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்தோம் என்றவர்,  கஜா புயலால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன.  ஏராளமான வாழை, தென்னை, மரங்கள் உள்ளிட்டவை முறிந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. ஏராளமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த போது, ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விரைவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க அனைத்து துறைகளும் இயங்கி வருகின்றன. அரசின்  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளன. நாங்கள் டில்லி சென்றதும், புயல் பாதிப்பு குறித்த எங்களின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய குழு அளிக்கும் அறிக்கையை தொடர்ந்தே, தமிழகத்துக்குத் தேவையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.