நாம முதல்ல நம்மள புரிஞ்சிக்கணும்!
நெட்டிசன்                                                     அமலன் (Amalan Amaladoss )
பெயர் : முகமது சாஜித், சொந்த ஊர் : இராமநாதபுரம். தற்போது வசிப்பது:  சென்னை.  தொழில் : பஞ்சர் கடை. இப்போ இந்த டேட்டாவுக்கு அவசியம்? நேரமிருப்பின் படிங்க.
நேற்று மதியம் அலுவல் தொடர்பாக சென்று விட்டு ஜெமினி பாலத்துக்கு கீழே திரும்பும்போது வண்டி பஞ்சர். பக்கத்தில் பஞ்சர் போடும் இடம் எங்கிருக்கிறது என்று  கேட்டதில், “மூன்று தெரு தாண்டி ஒரு பாய் இருக்கார்” என்று அவரது செல் நம்பர் கொடுத்தார் ஒருவர்.
அந்த எண்ணுக்கு போன் செய்கிறேன். எதிர்முனையில் ‘அலைக்கும் சலாம்’ என்றவரிடம், “ வண்டி பஞ்ச ராயிடுச்சு” என்று சொல்லி, நான் நிற்குமிடத்தையும் சொன்னேன்.
nettizen
“இதோ வந்திடுறேன்” என்றவர் அடுத்த பத்தாவது நிமிடம் அகன்ற கேரியர் வைத்த சைக்கிளில் வந்திறங்கினார்.
“புது டியூப் பாய். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் மாற்றினேன்” என்கிறேன்.
“ரோட்ல ஆயிரம் வண்டி போகுது.  உங்க வண்டி டயர்ல மட்டும் ஆணி வந்து ஏறிச்சே,  ஏன்?” என்கிறார்.
“அதானே, ஏன்?” என்று நான் திருப்பி கேட்க…. “அதான் விதி!” என்கிறார்.
ஆஹா.. மறை கழன்றவராக இருப்பாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே சக்கரத்தை கழற்றி எடுத்துவிட்டார்.
கேரியரில் சக்கரத்தை வைத்து, “வாங்க போகலாம்”  என்கிறார்.  “இல்ல..  நீங்க பஞ்சர் ஒட்டிட்டு வாங்க. இங்கேயே நிற்கிறேன்!”  என்கிறேன். “அதெல்லாம் முடியாது!  உங்க கண்ணு முன்னாடிதான் ஒட்டுவேன். ஒருவேளை உண்மையிலேயே ரெண்டு மூணு பஞ்சர் இருந்தா நான் ஏமாற்றியதா நினைப்பீங்க. நம்பிக்கையும் உண்மையும் காயப்படக்கூடாது பாருங்க..” என்று அவர் சொல்ல..  அவரோடு செல்கிறேன்.
நடந்துகொண்டே உலக நடப்பு, மனிதம், நேர்மை என்று அடுக்குகிறார். உடம்பெல்லால் அழுக்காக இருந்தாலும் அவரது உள்ளம் தூய்மை என்பது மெல்ல தெளிவாகிறது  எனக்கு.
பஞ்சர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது இடையில் கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் வந்து பேச்சுக்கொடுக்க பைபிள் பற்றி பேச்சு வருகிறது. பாய்க்கு பைபிள் பற்றி என்ன தெரியப்போகிறது என்று வந்தவர் வாயை விட…    திருப்பாடல்கள், மத்தேயு, என்று பின்னிப்பெடலெடுக்கிறார் பாய்!
அவ்வளவுதான்….  வந்தவர் சைலண்ட் ஆகி திரும்புகிறார்.
“சரி,  பாய்க்கு பைபிள் தெரியும்போல..” என்று நினைத்தால்,  பகவத் கீதை, இராமாயணம் என்று விளாசுகிறார்.
“என்ன பாய் படிச்சிருக்கீங்க?”  என்று கேட்ட நொடி, “ வாழ்க்கையை!”  என்கிறார். சற்று இடைவெளியில் சிரித்துக்கொண்டே, “எட்டாங்கிளாஸ்” என்றவர், “நாம மத்தவங்கள புரிஞ்சிக்கறது  ரொம்ப அவசியம். அதைவிட முக்கியம்,  நாம நம்மை புரிஞ்சிவச்சிக்கிறது!” என்கிறார்.
பாய் பேச பேச அவர் மீதான மரியாதை விசாலமடைகிறது.
“ஒரு பஞ்சர்தான். ஜாயின்ட்ல போனதால ரெண்டு ஒட்டு போடணும்” என்ற அவரது தொழிலும் சுத்தமாக இருக்கிறது.
சக்கரத்தை மீண்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் வண்டி நோக்கி யாகியா அலி தெருவிலிருந்து திரும்புகிறோம்.
என் மன கிழிசலுக்கு சேர்த்தும் பாய் ஒட்டுப்போட்டதுபோன்ற உணர்வு.