சென்னை:

தினகரனை அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்தித்து வருவதை அரசியலாக்காதீர்கள் என்றும், எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

டிடிவி தினகரனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் சந்தித்து வரும் வேளையில், ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவரும் வேளையில், அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறி உள்ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள், டிடிவி தினகரனை ஏற்கனவே அறிவித்தபடி கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், கட்சியில் இருந்து என்னை ஒதுக்கி வைக்க அவர்கள் யார் என்றும், என்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அதிமுக அம்மா அணி இரண்டாக பிளவு பட்டது. அதையடுத்து  அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுவரை அவருக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அப்போது,  அமைச்சரவையில் மாற்றம் செய்யக்கோரியும்,  தங்கதமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடியும் கட்சி எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், என்னுடைய பதவி பறிக்கப்படும் என்று எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன் பேசியதை யாரும்  பொருட்படுத்த வேண்டாம். அதை மறந்து விடுங்கள் என்றார்.

அனைத்து எம்எல்ஏக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வரும் வேளையில், டிடிவி தினகரனை சில எம்எல்ஏக்கள் சந்தித்து வருவதை அரசியலாக்கக் கூடாது என்றும்,

சசிகலா சிறையில் உள்ளதாலும், தினகரனையும் ஒதுக்கி வைத்ததாலும் கட்சியை வழிநடத்துவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என்றும்,  ஜெயலலிதாவின் அரசுக்கு எந்த வித அச்சுறுத்த லும், ஆபத்தும் ஏற்படவில்லை. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற கூறினார்.