7 கோடி பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதில்!

--

டில்லி,

பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும்  7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் கூறி உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது, மோடி அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

ஏற்கனவே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது,  விவசாயிகள், இளைஞர்கள் தான் இந்தியாவில் உள்ள இரண்டு முக்கிய பிரச்னைகள். இந்த பிரச்னைகளுக்கு பிரதமர் மோடியால் தீர்வு காண முடியவில்லை.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று அளித்த வாக்குறுதியை மோடி  செயல்படுத்த தொடங்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர்  ஜவ்டேகர்,  மோடியின் ஆட்சியில் ஏழு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுவதில் உண்மையில்லை என கூறிய அவர், முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் 7 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என ராகுல் கூறியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.