எந்த உதவியும் கிடைக்கவில்லை! : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதி மக்கள் கதறல்!( வீடியோ)

டலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கிராமங்களில் 400  குடும்பத்தினர் தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா பகுதியில் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் என இரு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோரம் உள்ள அகர நல்லூர், பழைய நல்லூர், வேலக்குடி, கண்டியா மேடு, வையூர், காட்டுக்கூடலூர், ஜெயகொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், மேலக்குண்டலாபாடி, கவரப்பட்டு மற்றும்  சுற்றுவட்டாரப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் நானூறு குடும்பத்தினர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தவித்துவருகிறார்கள்.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தயாநிதி patrikai.com இதழிடம் தெரிவித்ததாவது:

“புதிதாக அணை கட்டப்பட்டுள்ள அகரநல்லூர் பகுதியில் பழைய கொள்ளிட கரையில் கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்காக, கரையை உயர்த்தினார்கள். சமீபத்திய வெள்ளத்தில் அந்த பகுதி உடைந்துவிட்டது. இதனால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மார்பளவு தண்ணீர் தேங்கியது. தற்போது சிறிது வடிந்திருந்தாலும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியாதபடி வெள்ள நீர் சூழ்ந்துதுள்ளது.

வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசுப்பள்ளிகளில் தங்கவைப்பது வழக்கம். ஆனால் சில பகுதிகளில் பள்ளிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பலரும் சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

குண்டலாபாடி, திட்டுக்காட்டூர், ஜெயகொண்டபட்டினம் பகுதிகள்தான் முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆகவே அப்பகுதி மக்களுக்கு ஓரளவு உதவிகள் கிடைத்தன.

ஆனால் பிற பகுதிகள் பழைய கொள்ளிட உடைப்பால் பிறகு பாதிக்கப்பட்டவை. இவை குறித்து  செய்திகள் வெளிவரவில்லை. ஆகவே அப்பகுதி மக்கள் எந்தவித உதவியும் பெற முடியாமல் சாலையோரங்களில் தவிக்கின்றனர்” என்றார் வழக்கறிஞர் தயாநிதி.

தயாநிதி

இப்பகுதி மக்கள் தங்களுக்கு இதுவரை எந்தவித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை என்று குமுறுகிறார்கள். வீடுவாசல் இழந்தது மட்டுமின்றி உடுத்த மாற்றுத்துணியோ, அடுத்தவேளை உணவோ இன்றி இவர்கள் சிரமப்படுகிறார்கள்.

நம்மிடம் பேசிய தயாநிதி, “அந்த மக்களுக்கு தற்போது உணவு அவசியம். அவர்கள் பசியால் தவிக்கிறார்கள். அரிசி, மளிகை பொருட்கள், மண்ணெண்ணெய், ஆடைகள் அளித்தால் ஓரளவு அவர்கள் தாக்குப்பிடிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

தயாநிதியின் அலைபேசி எண்: 9787974525

மக்களின் கதறல் வீடியோ: