சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை! சென்னை போராட்டத்தில் அய்யாக்கண்ணு

சென்னை,

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழக விவசாயிகள் அரை நிர்வாணப்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 32 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் இன்று சென்னையில் தொடங்கி உள்ளது. அப்போது  மத்தியஅரசு எங்களை நிர்வாணமாக்கி விட்டது என்றும் சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் சென்னை போராட்டத்தில் அய்யாக்கண்ணு கூறினார்.

ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தலைநகர் டில்லியில்  41 நாள்கள் அரைநிர்வாணம், முழு நிர்வாணம் போன்ற  தொடர் போராட்டத்தை நடத்தியும், மத்திய அரசு கண்டு கொள்ளாததால், தமிழக அமைச்சர்  பொன்.ராதா கிருஷ்ணன் கொடுத்த உறுதிமொழியை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்றுக்கொண்டு தமிழகம் திரும்பினர்.

ஆனால், மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்றும், மீண்டும் விவசாயிகள் போராட்டம் 9ந்தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டம்  நடைபெறும் என்று கடந்தவாரம்  கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை சேப்பாக்கம் அருகே விவசாய அமைப்பை சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் அரைநிர்வாண நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்றைய முதல்நாள்  போராட்டத்தின்போது, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது,

வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.

விவசாயிகளின் கருகிய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி இருக்கிறது. விவசாயி களுக்கு தற்போது வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியவில்லை. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தர வேண்டும்.

தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள்.

ஆனால் தேர்தல் முடிந்தால் விவசாயிகளை அடிமைகள் போல நடத்துகிறார்கள்.

ஹைட்ரோகார்பனை எடுத்து எங்களை கொலை செய்ய பார்க்கிறார்கள்.

விவசாயிகள் 4ம் தர குடிமக்களாக வாழ கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டெல்லியில் நாங்கள் 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் ஆளும் மத்திய அரசோ எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.

டில்லியில் நிர்வாணமாக ஓடிவிட்டோம், இங்கேயும் நிர்வாணமாக ஓட விட வேண்டாம் என நினைப்பதாகவும், இனி வாழ்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்றார்.

தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார். 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக கூறினார் அதை நிறைவேற்றவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வழக்கு தொடர்ந்து இருந்தோம், அதற்கு உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழக அரசு அதன் மீது மேல்முறையீடு செய்துள்ளனர்.

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்துவிட்டு சரியான விலை கொடுக்கமால் அரசு ஏமாற்றி வருவதாகவும், எங்களுக்கு நியாமும் கிடைக்கவில்லை, இழைக்கப்பட்ட அநீதிக்கு பதிலும் இல்லை என்று தெரிவித்த அவர் நதிகளை இணைக்க வலியுறுத்தி 29 மாநிலங்களில் போராட்டம் நடத்த உள்ளதாகாவும் தெரிவித்தார்

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 32 நாட்களுக்கு தொடர்ச்சி  போராட்டம் நடைபெறும் என்றும்,  எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், வெற்றி கிடைக்கும் வரையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.