நாங்கள் கடவுளைப் பார்த்தோம்.. பேசினோம்!: கேரள மக்கள் நெகிழ்ச்சி

பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு.. எல்லாமாக கேரள மாநிலத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து இடம் பெயர்ந்திருக்கிறார்கள். பலநூறு பேர் பலியாகியிருக்கிறார்கள். மேலும் பலரைக் காணவில்லை.

இப்படி உயிராபத்தில் இருக்கும் கேரள மக்களைக் காப்பாற்ற இளைஞர்கள், பொதுமக்கள், இராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து  ஈடுபட்டு வருகிறார்கள்.

அதோடு அண்டை மாநிலங்கள் முதல் பல்வேறு நாடுகள் வரை உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன.

கேரள மக்களின் இந்தத் துயரத்தில் நேரடியாக பங்கேற்று கரம்கொடுத்தவர்கள் மீனவர்கள். ஆம்… கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், தங்கள் படகுகளை நகரத்தின் பக்கம் திருப்பினார்கள். வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் பாய்ந்த படகுகள், சிக்கியிருந்த மக்களைத் தேடித்தேடி கொண்டுவந்து கரை சேர்த்தன.  எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த சேவையில் ஈடுபட்டார்கள்.

இத்தனைக்கும் அந்த மீனவர்கள், இதர மக்களால் ஒடுக்கப்படும் இன மக்கள்தான். ஆனாலும் தங்கள் கருணை உள்ளத்தால் உதவிக்கு ஓடோடி வந்தார்கள்.

வெள்ளம் சூழ்ந்த ஒரு வீட்டில் சில பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை வெள்ள நீரில் போராடி மீட்டு, முகாமுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்கள் மீனவர்கள்.

அப்பெண்களில் ஒருவர் “வெள்ளத்தில் சிக்கி மரணம் நிச்சயம் என்று உயிர் பயத்தில் அஞ்சிக்கொண்டிருந்தோம். ஆறு பேர் வந்தார்கள், 3 பேர் தமிழில் பேசினார்கள், 3 பேர் மலையாளத்தில் பேசினார்கள்.  அவர்கள் எங்களைக் காப்பாற்றினார்கள்.  உங்களுக்கு ஏதாவது  செய்யவேண்டும் என்றோம்.

அவர்களோ உங்கள் பணத்தையோ, உதவியையோ பெற்றால் கடலம்மா எங்களை மன்னிக்கமாட்டாள். மீன் கொடுத்து எங்களை காக்க மாட்டாரள். உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை” என்றார்கள்” என்கிறார் அந்தப் பெண்மணி நெகிழ்ந்துபோய்.

புகைப்படம் ஒன்றி ஓரிரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மீனவரகள் தங்களது மீட்பு பணி முடிந்து செல்கின்றனர். வழிநெடுக மக்கள் கைகளை கூப்பி கடவுளை வணங்குவது போல அவர்களை வணங்குகின்றனர். இதற்கிடையில் மீனவர் சங்க தலைவர் ஒருவர், “முதல்வர்  அவர்களே, கேரளாவின் இராணுவம் என நீங்கள் எங்களை கூறிய போது பெருமைப்பட்டோம். ஆனால் ரூ.3000 கொடுப்பேன் என நீங்கள் கூறியது எங்களை வலிக்கச் செய்கிறது. பணம் கொடுப்பீர்கள் என நினைத்தா வந்தோம், மக்கள் சிரமப்படக்கூடாது என்றுதான் உதவிக்கு வந்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் கேரள மக்கள், “நாங்கள் கடவுளைப்பார்த்தோம்.. அவர்களுடன் பேசினோம்” என மீனவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன்  சொல்கிறார்கள்.