“சில தவறுகளால் வெற்றியை கோட்டைவிட்டோம்” – பாகிஸ்தான் கேப்டன் புலம்பல்!

லண்டன்: எங்களுடைய சில தவறுகளால், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம் என்று புலம்பியுள்ளார் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் அசார் அலி.

இங்கிலாந்து வென்ற முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிதான் வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், முடிவு வேறாக அமைந்தது. இந்நிலையில், இதுகுறித்து புலம்பியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி.

அவர் கூறியுள்ளதாவது, “முதல் டெஸ்ட் போட்டி சிறப்பான ஒன்று. ஆனால், முடிவில் எங்களுக்குப் பெரிய ஏமாற்றம். வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருந்தும் நாங்கள் அதை கோட்டைவிட்டோம். நல்ல ரன்-அவுட் வாய்ப்புகளை வீணடித்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

நாங்கள் நிர்ணயித்த டார்கெட் போதுமானதுதான் என்றாலும், பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் வீச முடியாதது ஆச்சர்யம் அளித்தது. பட்லர் – வோக்ஸ் ஜோடி எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டது” என்றுள்ளார்.