டில்லி:

எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொள்ள உரிமை உள்ளதா என்று பாஜ எம்பி வருண்காந்தி லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.

லோக்சபா பூஜ்ய நேரத்தில் அவர் பேசுகையில், ‘‘1952ம் ஆண்டில் ஒரு எம்பி நாடாளுமன்றத்தில் 123 நாட்கள் கலந்துகொள்ளும் வகையில் இருந்தது. இது கடந்த ஆண்டு 75 நாட்களாக குறைக்கப்பட்டது மிகவும் வெட்க கேடானது. கடந்த 10 ஆண்டுகளில் எம்.பி.க்களின் சம்பளம் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

எம்.பி.க்கள் தான் அதிகளவில் ஊதிய உயர்வு பெற்றுள்ளனர். வரி விதிப்பு மசோதா, ஆதார் போன்ற முக்கிய அம்சங்கள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரில் 16 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் 2 வாரங்களில் இவை குழுவுக்கு பரிந்துரை செய்யப்படாமல் நிறைவேற்றப்பட்டது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘தற்போது எம்.பி.க்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முதன் முதலாக நேரு பிரதமராக இருந்தபோது மக்கள் சிரமப்பட்டதால் ஆறு மாதங்களுக்கு எம்.பி.க்களுக்கு சம்பளம் கிடையாது என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், நமது நோக்கம் நமது ஊதிய உயர்வை நோக்கி உள்ளது. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் தங்களது சிறுநீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களை அழுத்தமாக புரிய வைப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர்’’ என்றார்.

கடந்த மாதம் 19ம் தேதி எம்எல்ஏ.க்களின் ஊதியத்தை தமிழக அரசு இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. பிரிட்டனில் 13 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்ப்டடுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய எம்.பி., எம்எல்ஏ.க்களின் சம்பளம் 400 சதவீதம் வரை உயர்த்தப்ப்டடுள்ளது. அதே சமயம் கடந்த 20 ஆண்டுகளில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

தொடர்ந்து வருண்காந்தி பேசுகையில், ‘‘50 சதவீத மசோதாக்கள் நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு பிறகே நிறைவேற்றப்பட்டுள்ளது. விவாதங்கள் இன்றி மசோதக்கள் நிறைவேற்றப்படுவதால் நாடாளுமன்றத்தின் நோக்கமே செயல்படாமல் போய்விடுகிறது. மசோதாக்கள் கொள்கையின்றி அரசியல் காரணங்களுக்காக நிறைவேற்றப்படுகிறது.

41 சதவீத மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய பேரரசில் எம்.பி.க்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய சுய அதிகார ஆணையம் உள்ளது. இந்த ஆணையத்தில் எம்.பி.க்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆணையம் தான் ஊதிய உயர்வை நிர்ணயம் செய்கிறது. ஆனால் இத்தகைய நடைமுறை இந்தியாவில் இல்லை. எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றம் சாராத ஒரு குழுவை அமைக்க வேண்டும்’’ என்றார்.