லண்டன்: நம் அணியில் மிடில் ஆர்டர் பிரச்சினை இருந்துவருகிறது என்பது உண்மைதான். ஆனாலும், நாம் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்தியா அரையிறுதியோடு உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியதை அடுத்து கருத்து தெரிவித்த அவர், “ஏதோ ஒரு 30 நிமிட ஆட்டத்தை வைத்து அனைத்தையுமே முடிவுசெய்துவிட முடியாது. நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறந்த கிரிக்கெட்டை ஆடியுள்ளோம்.

ஷிகர் தவான் காயமடைந்ததால், 4ம் இடத்துக்கான ராகுல் முதலிடத்தில் இறங்க வேண்டியதானது. பின்னர், அந்த இடத்தில் விஜய் சங்கரை கொண்டுவந்தாலும் அவரும் காயமடைந்துவிட்டார். எனவே, நமக்கு வேறு வழியில்லை.

மாயங்க் அகர்வாலை கொண்டுவந்து ஓபனிங் இறக்குமளவிற்கு நமக்கு அவகாசம் இல்லை. ஒருவேளை அவகாசம் இருந்திருந்தால் அதை செய்திருக்கலாம். அரையிறுதிப் போட்டியின்போது, எதற்காக தோனியை 4ம் இடத்தில் இறக்கவில்லை என்ற கேள்வி வருகிறது.

அது அணியின் முடிவு. ஒருவேளை தோனி முதலிலேயே களமிறங்கி ஆட்டமிழந்திருந்தால், நிலைமை இன்னும் வேறுமாதிரி மோசமாகியிருக்கும். எனவே, அந்த சூழலில் எடுக்கப்பட்ட முடிவுதான் அது. நாம் இன்னும் நம்மை தயார்செய்துகொள்ள வேண்டியுள்ளது. அடுத்து வரும் நாட்கள் நமக்கானவை.

தோல்வியால் துவண்டிருந்த நமது அணியினரை, சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியதற்காக நான் பாராட்டினேன்” என்றார்.