அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது: சென்னை கேப்டன் தோனி

அபுதாபி: சென்னை அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது என்று கூறியுள்ளார் அந்த அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி.

இன்றைய கடைசி போட்டியில், பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகளில் வென்ற பிறகு இதை தெரிவித்தார் தோனி. மேலும், இந்த ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வு பெறுகிறார் என்ற யூக தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அவர், அடுத்த சீசனிலும் தான் இருப்பேன் என்பதை உறுதிபடுத்தினார்.

அவர் கூறியதாவது, “நாங்கள் எப்படி அறியப்படுகிறோமோ, அந்தவகையில் மீண்டும் திரும்பி வருவோம். இதுவொரு கடினமான தொடராக அமைந்தது. நாங்கள் இத்தொடரில் அதிக தவறுகளை செய்தோம்.

கடைசி நான்கு போட்டிகள், நாங்கள் எப்படி ஆட வேண்டுமென்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன. எங்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் மிகவும் பின்தங்கியிருந்தால், ஆற்றலுடன் திரும்பி வருவது கடினம்.

ஒரு அணி வெற்றிகரமாக திகழ்வதற்கு டிரெஸ்ஸிங் அறையின் சூழல் மிகவும் முக்கியமானது. அது சரியாக அமையவில்லை எனில், எதுவுமே சரியாக அமையாது. ஏலம் தொடர்பாக பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறது என்பதும் முக்கியம்.

இந்த ஆண்டே ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது. பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடியதற்கு, இந்த சீசன் சான்றாக அமைந்தது” என்றார் தோனி.