ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் சொல்லலியே! முரளிதரராவ்

சென்னை:

ஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் சொல்ல வில்லையே என்று பாஜக தமிழக பொறுப்பாளர்  முரளிதரராவ் கூறி உள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தனக்கு பாஜக காவிகலர் பூச முயற்சி செய்வதாகவும், அதில் நான் சிக்க மாட்டேன் என்று கூறினர். பின்னர் ஒருமணி நேரம் கழித்து, சிலர் தன் மீது காவி கலர் பூச முயற்சி செய்வதாக மாற்றிப் பேசினார்.

ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக கூறும், நடிகர் ரஜினிகாந்தின் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் முரளிதர் ராவிடம் செய்தியாளர்கள், திருவள்ளுவர் சிலை, நடிகர் ரஜினிகாந்தின் பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர், திருவள்ளுவர் கடவுள் மறுப்பாளர் அல்ல. அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது போதனைகளை கடவுள் மறுப்பாளர்கள் போற்றுகின்றனர். அவர் இயற்றிய திருக்குறள் உலக மக்களுக்கானது. திருவள்ளுவர் கடவுள் மறுப்பாளர் இல்லை என்பதை, அவரது எழுத்துக்கள் மூலமே உணரமுடியும். எனவே திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை திமுக மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்றும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது என்றார்.

ரஜினிகாந்தின் பேட்டி குறித்த கேள்விக்கு,  ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லையே என்று கூலாக பதில் தெரிவித்தார்.