இந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன?

புதுடெல்லி: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது பற்றி மத்திய அரசு எப்போதும் பேசவில்லை என்றுள்ளார் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷான்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் கண்டறியப்படும் கொரோனா தொற்றின் தினசரி சராசரி 3.72%. அதாவது, 10 லட்சத்திற்கு 211 பேர்கள். உலகின் இதர பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு.

அதேசமயம், இந்தத் தொற்று எண்ணிக்கை, இதர ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலோ அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொற்று விகிதம் 7.15% என்பதிலிருந்து 6.69% என்பதாக குறைந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுவோரின் எண்ணிக்க‍ையைவிட, கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை, கடந்த நவம்பரில் கூடியுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு எப்போதும் பேசவில்லை” என்றுள்ளார்.

சீரம் நிறுவனம் மீதான புகார் குறித்து கேட்கப்பட்டபோது, “இத்தகைய குறைபாடுகள், தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாக, இந்தியா வகுத்துள்ள காலக்கெடுவை பாதிக்காது” என்றார் அவர்.