பெட்ரோல், டீசலுக்கு லோன் தர ‘நாங்கள் ரெடி’: கோவை தனியார் நிதி நிறுவனம் அறிவிப்பு

கோவை:

விண்ணை எட்டும் அளவில் உயர்ந்துகொண்டே வரும்  பெட்ரோல், டீசலுக்கும் லோன் தர ‘நாங்கள் ரெடி’யாக இருக்கிறோம் என்று  கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் அறி வித்து உள்ளது. இந்த நிதி நிறுவனம் ஏற்கனவே வாகன கடன் கொடுத்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினசரி  நிர்ணயித்துக் கொள்ள லாம் என்று மத்திய அரசு அறிவித்தது முதல்  தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில்,  கச்சா எண்ணெய் விலை, மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றாலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலை காரணமாக, வாகன வாடகைகளும் உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏறி வருகின்றன.

இந்த விலை உயர்வு காரணமாக நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள், மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு கோவையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் கடன் வசதி செய்ய முன்வந்துள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள  இந்துஸ்தான் பெட்ரோல் பங்குடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி, பெட்ரோல் டீசல் கடன் வாங்க விரும்புபவர்கள் அதற்கான ஆவனங்களை சமர்ப்பித்து அதற்காக அடையாள அட்டை பெற வேண்டும்.

பின்னர் அதைக்காட்டி குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில், தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். இந்த எரிபொருளுக்கான கட்டணம் உடன் அதற்கான வட்டியும் சேர்ந்து, வாடிக்கையாளர் அந்த நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும்.

இந்த புதிய வசதி தொடக்கத்தில் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அனைத்து தரப்பினரும் வழங்கப்படும் என்று நிதி நிறுவனம் தெரிவித்து உள்ளது.