முழு சம்பளத்தையும் தருகிறோம்; ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதி வேண்டும் – சொல்வது யார்?

எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டாமெனவும், அந்த நிதிக்காக தங்களது முழு சம்பளத்தையும் தருவதற்கு தயார் எனவும் கூறியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் சுதீப் பந்தோபாத்யாய்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி, ஏப்ரல் 8ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில், திரிணாமுல் காங்கிரசின் சார்பாக அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் பந்தோபாத்யாய் பங்கேற்றார்.

ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், “மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரியபடி ரூ.25 ஆயிரம் கோடி நிதியை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டாம் எனவும், எங்களது முழு சம்பளத்தையும் தர தயாராக உள்ளோம் எனவும் கூறினேன். தொகுதி நிதி, அடிமட்டம் வரை உதவுகிறது; எனவே அதை நிறுத்தக்கூடாது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு, இந்தியா தனது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான இருப்பை உறுதி செய்த பின்னரே, மற்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிவாரணத் தொகையை அதிகரிக்கும் வகையில், பிரதமர், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில், அடுத்த ஓராண்டில் 30% பிடித்தம் செய்யப்படும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.