விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம்! இஸ்ரோ தலைவர்

ஸ்ரீஹரிகோட்டா,

டுத்த 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.

நேற்று  மாலை 5.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக  செலுத்தப்பட்ட ராக்கெட், 16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பிறகு செய்தியாளர்களிடம்  இஸ்ரோ தலைவர்  கூறியதாவது,

640 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.  இது,  முதல் முயற்சியிலேயே வெற்றிகரமான செலுத்தப்பட்ட  அதிக எடைகொண்ட ராக்கெட் என தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடியும் என்றும், மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அடுத்த 7 ஆண்டுகளில் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரோ வரலாற்றில்  இன்று முக்கியமான நாள் என்று கூறிய இஸ்ரோ இயக்குனர், ராக்கெட் ஏவுவதற்கான செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும்,  அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கிரண்குமார்  கூறினார்.

பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் ஜூன் 23ல் விண்ணில் செலுத்தப்படும் என்றும், சந்திராயன் 2 விண்கலம் அடுத்தாண்டு விண்ணில் செலுத்தப்படும் என்றும்  கிரண்குமார் தெரிவித்தார்.

அடுத்து வரும் ஆண்டுகளில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிற நாடுகள் இந்தியாவை அணுகும் என்றும் கிரண்குமார் குறிப்பிட்டார்.