புதுடெல்லி: இனிவரும் நாட்களில், பந்தைப் பளபளப்பாக்குவதற்கு, எச்சில் அல்லது வியர்வைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால், அதை அன‍ைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏற்க வேண்டுமென கூறியுள்ளார் இந்திய வேகம் இஷாந்த் ஷர்மா.
இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்டு வருபவர் இஷாந்த் ஷர்மா.
அவர் கூறியதாவது, “இன்றைய சூழலில் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பந்தில் எச்சில் அல்லது வியர்வைப் பயன்படுத்தி பளபளப்பாக்குவதற்கு தடை விதிக்கப்படலாம். அப்படி நடந்தால் அதை வீரர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.
எச்சில் அல்லது வியர்வை இல்லாமல் பந்தை ஸ்விங் செய்வது கடினம். வலைப்பயிற்சியின்போது, வீரர்கள் சென்று பந்தை எடுத்துவர வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே, மாற்றங்கள் குறித்து அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. நிகழ்காலம் மட்டுமே முக்கியம்” என்றார்.
ஏற்கனவே வீரர்கள் கைகுலுக்கிக் கொள்வதற்கு தடை உள்ளது. வரும் நாட்களில் எச்சில் மற்றும் வியர்வைக்குப் பதிலாக, வேறு பொருட்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.