சென்னை:

திமுகவினரின் பேனர் காரணமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்து விடக்கூடாது என்று கூறினார்.

சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சாலையில் நடுவில் சட்டவிரோத மாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் தமிழக அரசை கடுமையாக சாடியது. மேலும், பேனர் வைக்க கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள், தங்களது தொண்டர்களுக்கு பேனர் வைக்க தடை விதித்து உள்ளது. தி.மு.க சார்பில் இனிமேல் பேனர்கள் வைக்கப்படமாட்டாது என நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி,  அஎந்த ஒரு நிகழ்ச்சியிலும் கட்அவுட், பேனர்கள் வைக்கமாட்டோம் என திமுக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தவர், சுபஸ்ரீயின் மரணத்தை  ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சுபஸ்ரீயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது என்று கூறியவர், இன்னொரு சுபஸ்ரீயை இதுபோல் நாம் இழந்துவிடக்கூடாது.

இந்தச் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தவர், அனைத்து கட்சியினரும் இனி ஃப்ளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என தீர்மானம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.