அணு ஒப்பந்தத்தைப் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம்: ஜெர்மன் தூதர்

புதுடெல்லி: வளைகுடாப் பகுதியில் எப்படியேனும் போரைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறையைத் தடுக்க, ஜெர்மனி தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக இந்தியாவிற்கான அந்நாட்டு தூதர் வால்டர் ஜே.லிண்ட்னெர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை காக்க ஜெர்மனி மிகவும் மெனக்கெடுகிறது. இந்தியாவைப் போலவே ஜெர்மனியும், வளைகுடாப் பகுதியில் நிலவும் இறுக்கமான சூழலை தவிர்கக பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

அணு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தால், மேற்காசியாவில் நிலைமை மோசமாகும். ஜெர்மனி உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகள் அந்த மோசமான நிலையை விரும்பவில்லை.

எனவேதான், அணு ஒப்பந்தத்தைப் பாதுகாக்க நாங்கள் போராடி வருகிறோம். உலகில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது மோசமான விளைவுகளை உண்டாக்கும்” என்றார்.