விஞ்ஞானம் தேவை கோமிய ஞானம் தேவை இல்லை : சென்னை இல்லத்தரசி

சென்னை

ள்ளிகளில் விஞ்ஞான அறிவு குறித்து மாணவர்களின் பேரணி ஒன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் விஞ்ஞானத்துக்கு எதிராக உரையாற்றுவதாக நாடெங்கும் பல கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.   அமைச்சர்களின் இந்த போக்கை எதிர்த்து நாடெங்கும் உள்ள பல நகரங்களில் விழிப்புணர்வு பேரணிகளை பள்ளிக் குழந்தைகளுடன் கல்வியாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர்.    இதுவரை நாடெங்கும் சுமார் 18 நகரங்களில் இத்தகைய பேரணிகள் நடந்துள்ளன.

 

நேற்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் இவ்வாறு ஒரு பேரணி நடைபெற்றது.  இந்தப் பேரணியில் கல்வியாளர்கள், விஞ்ஞான ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.   இந்த பேரணி விஞ்ஞான ஆர்வலர் திலகர் என்பவரால் ஒருங்கிணைக்க்கப் பட்டது.   இந்த பேரணி குறித்து திலகர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அப்போது திலகர், “மத்திய அரசு தொடர்ந்து விஞ்ஞானத்துக்கு எதிராக கருத்துக்கள் கூறி வருகின்றன.  சமீபத்தில் ஒரு அமைச்சர் பரிணாம வளர்ச்சிக்கு எதிராக சில கருத்துக்கள் கூறி உள்ளார்.    பரிணாம வளர்ச்சி கண்டுபிடிப்பின் படி குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.   ஆனால் அதை அமைச்சர் சத்யபால் சிங் மறுத்துள்ளார்.  மற்றொரு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இந்த கருத்துக்கள் தவறு எனக் கூறியும் அமைச்சர் சத்யபால் அதை மாற்றிக் கொள்ளவில்லை.” எனக் கூறினார்.

இந்தப் பேரணியில் கலந்துக் கொண்ட இல்லத்தரசி ஜெயந்தி ஸ்ரீனிவாசன், “எனது குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர்.   அவர்களுக்கு விஞ்ஞானம் மட்டுமே தேவை.   கோமியம் பற்றிய ஞானம் தேவை இல்லை. “  எனக் கூறி உள்ளார்.   சென்ற வருடம் மத்திய அரசு பஞ்சகவ்யம் (கோமியம், பசுஞ்சாணி, பால், தயிர் மற்றும் நெய் சேர்த்த கலவை)  பற்றிய விஞ்ஞான உண்மைகளை மாணவருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவித்தது பற்றி ஜெயந்தி இவ்வாறு கூறி உள்ளார்.

பேரணியின் முடிவில் மத்திய அரசின் இந்த கருத்துகளுக்கு எதிராக தீர்மானம் ஒன்று இயற்றப் பட்டுளது.  தீர்மான நகலில் பேரணியில் கலந்துக் கொண்ட அனைவரும் கையெழுத்து இட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளனர்.