சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில், துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம் என  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராசக உள்ள  சூரப்பா, தமிழக அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசுக்கு நேரடியாக அவர் கடிதம் எழுதியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரவில்லை என தெரிவித்ததுடன், சிறப்பு அந்தஸ்து பெற்றால்,. தற்போது வழங்கப்பட்டு வரும்   69% இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும்  என தெரிவித்தார்.
மேலும், சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும் என்றும், இட ஒதுக்கீட்டை பறிக்கொடுக்க முடியாது என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைப்பதாகவும்,  சிறப்பு அந்தஸ்து மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கக்கூடிய சலுகைகளை தமிழக அரசே வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதுடன், “மூன்று ஆண்டுகால பணிக்காலத்தில் துணைவேந்தர் சுதந்திரமாக செயல்படலாம்; அதற்கு தடையில்லை. துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் 2035ம் ஆண்டுதான் உயர்கல்வி பயின்றவர்களின் சதவீதம் 50% இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால், ஆனால் தமிழகத்தில் சென்ற ஆண்டே உயர்கல்வியில்  49% எட்டியுள்ளதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.