5மணி நேரம் நடைபெற்றும் முடிவெடுக்க முடியாத அவலம்: முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 7ந்தேதி அறிவிப்போம் என்கிறார் கே.பி.முனுசாமி…

சென்னை: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவிலும், முடிவு எடுக்க முடியாமல் அதிமுக தலைமை தவித்து வருகிறது. இன்றைய கூட்டத்திலும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத அவலமே மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இபிஎஸ் ஓபிஎஸ் வருகிற 7 ம் தேதி கூட்டாக அறிவிப்பார் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை தலைமையைக் கொண்டுள்ள  அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.  இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.