திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடுத்த வழக்கை, சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில் வெற்றிவேலை தொடர்புகொண்டோம். அவரிடம், “அ.தி.மு.க. உறுப்பினர் யாரும் கட்சியை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகக்கூடாது. மீறி வழக்கு தொடர்ந்தால் அவர் உறுப்பினர் அந்தஸ்த்து ரத்தாகும் என்று அதிமுகவில் விதி உள்ளது. இந்த நிலையில் நீங்கள் வழக்கு தொடர்ந்தீர்கள். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே..” என்று கேட்டோம்.

அதற்கு வெற்றிவேல், “அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், அவர் பொதுக்குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை நடத்த உள்ளதாக சிலர் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தவறு.  பொதுச் செயலாளரின் அனுமதியின்றி இக்கூட்டத்தைக் கூட்ட அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இதைக் குறிப்பிட்டுத்தான் வழக்கு தொடர்ந்தேன்.

அ.தி.மு.க. உறுப்பினராக இருப்பவர் கட்சி நடவடிக்கைக் குறித்து வழக்கு தொடரக்கூடாது என்று கட்சி விதி இருப்பது உண்மைதான். ஆனால் பலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. சமீபத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. கூட வழக்கு தொடர்ந்தார். அவர், கட்சியில் உறுப்பினராக இருந்தபோதுதான் வழக்கு தொடர்ந்தார்.

கட்சி என்றில்லை.. எந்த ஒரு நிறுவனத்துக்கும் விதி இருக்கும். அதே நேரத்தில் விதி விலக்கும் இருக்கும். அதாவது கண்டிசன்ஸ் அப்ளை என்று போட்டிருப்பார்கள். அதுபோல நான் வழக்கு தொடர்ந்ததும் தவறல்ல.

அராஜகமாக பொதுக்குழுவைக் கூட்டுவோம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும் என்றால்,  அவர்களது கூட்டத்தில் புகுந்து நாங்கள் தடுக்க வேண்டும். கலவரம் உருவாகும். காவல்துறையும் அவர்கள் கையில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு கெடும்.

ஆகவே முறையாக நீதிமன்றத்தை நாடினோம்” என்றார் வெற்றிவேல்.

“தற்போது நீதிமன்றம் உங்களது வழக்கை தள்ளுபடி செய்ததோடு, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளதே. இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்” என்றோம்.

அதற்கு வெற்றிவேல், “நீதிமன்ற உத்தரவு எதுவானாலும் நாங்கள் ஏற்போம். ஏனென்றால் நாங்கள் நீதிக்கு தலைவணங்குபவர்கள். அதே நேரம், இந்த விசயத்தில் மேல்முறையீடு செய்ய விரும்புகிறோம்.

ஏனென்றால், பொதுவாக சிவில் வழக்குகளில் கோர்ட் நேரம் வீண் என்று சொல்லப்படுவதில்லை. காரணம், கோர்ட் பீஸ் கட்டித் தான் சிவில் சூட் நடத்தப்படுகிறது. ஆகவே, மேல் முறையீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாகவே  கருதுகிறோம்” என்றார் வெற்றிவேல்.

அவரிடம், “அரசு கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்துள்ளீர்களே” என்றோம்.

அதற்கு அவர், “அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். . ஆகவே அவரை நீக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்திருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.