சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியபோது அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் தான் கவுரவம் பார்க்கிறார்கள்.

தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழி நடத்துகிறது. தொழிலாளர்களின் ரூ.5,000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண நிர்பந்திக்கிறார்கள். மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே வெளியாட்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் போட முடியாது. தற்காலிக ஓட்டுநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டில் இவர்களது சம்பளம் 2.57 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 2.44 சதவீதத்துக்கும், 2.57 சதவீதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே இனி பேச்சுவார்த்த கிடையாது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம்’’ என்றார்.