ண்டன்

பிரிட்டன் நாட்டின் தொழிலாளர் கட்சி தாங்கள் ஆட்சி அமைத்தால் ஜாலியன்வாலா பாக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்க உள்ளதாக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது.

கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்த சரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்னும் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது.   அன்றைய தினம் சீக்கியர்களின் புத்தாண்டான பைசாகி ஆகும்.  அந்தக் கூட்டத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் எனப் பல தரப்பட்ட சுமார் 20000 பேர் இருந்தனர்.

அப்போது அங்கு ராணுவத்துடன் அங்கு நுழைந்த பிரிட்டன் ராணுவ தளபதி ஜெனரல் டயர் என்பவன் அங்கு நுழைந்து மக்களை நோக்கி சுட உத்தரவிட்டான்.  அங்கு ஒரே ஒரு சின்ன வாயில் மட்டுமே இருந்தது.   அத்துடன் மதில் சுவர்களும் மிகவும் உயரமாக இருந்ததால் யாராலும் தப்பிக்க முடியவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் 500 -600 பேர் கொல்லப்பட்டதாகவும்  பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துக்குப் பிரிட்டன் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் உள்ளிட்ட பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  கடந்த 1997 ஆம் ஆண்டு அரசி எலிசபெத், மற்றும் 2013 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான டேவிட் காமரூன் ஆகியோர் இந்தியா வந்து ஜாலியன்வாலா பாககில் பார்வையிட்ட போதும் மன்னிப்பு கோரவில்லை.

தற்போது பிரிட்டனில் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அந்நாட்டின் தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  சுமார் 107 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் அக்கட்சி ஆட்சி அமைத்தால்    ஜாலியன்வாலா பாக் கொலைகளுக்கு முறையாக மன்னிப்பு கோர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் முக்கிய தொகுதிகளான 15 தொகுதிகளில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக இந்தியர்கள் 40% க்கும் மேல் உள்ளனர்.  அதைத் தவிர 46 தொகுதிகளில் 20% இந்தியர்களும், 122 தொகுதிகளில் 10%க்கும் அதிகமாக இந்தியர்கள் உள்ளனர்.  இதன் மூலம் தொழிலாளர் கட்சிக்குப் பெருவாரியான இந்தியர்களின் வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.