ஈரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்

--

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன. .

அமெரிக்கா தவிர தற்போது மீதமுள்ள அனைத்து நாடுகளுடன் தொடர்ந்து செயல்படப் போவதாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூறியுள்ளன. . தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் எனவும் இந்நாடுகள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

2015 ஈரான் அணு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களது ஆதரவைத் தொடர இருப்பதாக கூறியுள்ளன.

முன்னதாக, ஈரானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.

தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ETTY IMAGES

அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, ”தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆகவே ஈரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

அதே நேரம், தனது கூட்டாளி நாடுகள் மற்றும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளுடன் பேசுவதற்காக அடுத்த சில வாரங்கள் காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றும், 90 மற்றும் 180 நாள் காலக்கெடு நடைமுறைகளின்படி செயல்பட இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.