தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு: முதல்வர் எடப்பாடி டில்லியில் பேட்டி

டில்லி:

நேற்று பிற்பகல் டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மோடியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

தமிழக வளர்ச்சி திட்டங்கள், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.

நேற்று மாலை டில்லி சென்றடைந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர்.  அங்குள்ள  தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக எம்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து  இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகம் சென்று எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும்,.  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது.

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி. அப்போது, செய்தியாளர்கள் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசினீர்களா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி,  தேதி அறிவிப்பு வெளியான பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறியவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திடவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன் என்றார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட வலியுறுத்தியதாகவும் கூறியவர், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்திய தாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம்தான் தள்ளி வைத்துள்ளது என்று தெரிவித்த முதல்வர், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான் என்று சிரிப்போடு பதில் அளித்தார்.

அதையடுத்து செய்தியாளர்கள் டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவித்த முதல்வர், துணை முதலமைச்சர்- தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; இந்த விவகாரம் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறினார்.