புதுச்சேரி: சட்டமன்றத்தில் நுழைவோம்….நியமன எம்எல்ஏ.க்கள் அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் கடந்த ஆண்டு ஜுலையில் பாஜக தலைவர் சாமிநாதன், நிர்வாகிகள் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

இவர்களை அங்கீகரிக்க மறுத்து சட்டசபைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. கடந்த மார்ச்சில் 3 பேரும் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். சபாநாயகர் உத்தரவின் பேரில் சபை காவலர்கள் அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் தங்களை திங்கட்கிழமை (நாளை) நடக்கும் கூட்டத்திற்கு அனுமதிக்க கோரி கடிதம் கொடுத்தனர். சபாநாயகரின் முடிவுக்காக இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘உயர்நீதிமன்றம் எங்கள் நியமனத்தை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றமும் சட்டசபைக்குள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை.

அதனால் நாளை நாங்கள் சட்டசபைக்கு செல்வோம். உயர்நீதிமன்ற தீர்ப்பு அமலில் இருப்பதால் சபாநாயகர் எங்களை அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் நாங்கள் திட்டமிட்டபடி சட்டசபைக்கு செல்வோம். சபாநாயகர் மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடருவோம். மத்திய அரசு எங்களை நியமித்துள்ளது.

இதை மீறினால் மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும். புதுச்சேரி கவர்னர் உத்தரவையும் சபாநாயகர் மீறி வருகிறார். இதனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சபாநாயகரை பொருத்த வரை இந்த அரசு இருக்க கூடாது என நினைக்கிறார். சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவையும் அவர் மீறுகிறார். இதற்கான பலனை அவர் சந்திக்க வேண்டி வரும்’’ என்றார்.