பிரிட்டிஷாரை விரட்டியது போல மோடியை விரட்டிவோம் – ராகுல் காந்தி

திருநெல்வேலி:

பிரிட்டிஷாரை விரட்டியது போல மோடியை விரட்டிவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி ராகுல்காந்தி இன்று சுவாமி தரிசனம் செய்தார், அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் பழங்கால சிற்பங்களை ராகுல் காந்தி பார்வையிட்டார் .

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி 2-வது நாளாக நெல்லையில் பிரச்சாரம் செய்தார். இன்று காலையில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வியாளர்கள் இடையே கலந்துரையாடினார்.

அப்போது 70 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷாரை அவரது சொந்த நாட்டிற்கு விரட்டியது போல் நரேந்திர மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்று பேசினார். இதைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.

வெளி பிரகாரம் வழியாக காந்திமதி அம்மன் சன்னதிக்கு சென்ற அவருக்கு கோவில் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராகுலுக்கு பரிவட்டம் கட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து நெல்லையப்பர் சன்னிதிக்கு வந்த ராகுல் காந்தி கோவிலின் வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் கோவில் சிறப்புகளையும் தெரிந்து கொண்ட அவர் அங்குள்ள சிற்பங்களையும் பார்வையிட்டார். அங்கிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது. மேல ரத வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராகுல். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார்.