சட்ட விரோதமாக நாடு புகுந்தவர்களை விரட்டி அடிப்போம் : அமித்ஷா ஆவேசம்

--

நாகவுர், ராஜஸ்தான்

ட்ட விரோதமாக நாட்டினுள் புகுந்தவர்களை கண்டறிந்து விரட்டி அடிப்போம் என பாஜக தலைவர் அமித்ஷா கூறி உள்ளார்.

வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. முக்கிய போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் இரு கட்சியினரும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் காங்கிரஸ் சார்பில் நட்சத்திரப் பேச்சாளர் என ராகுல் காந்தி கூறப்படுவதால் அவரை விமர்சித்து பாஜகவினர் பிரசாரத்தில் பேசி வருகின்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அசாம் மாநில குடியுரிமைப் பட்டியலில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் விட்டுப் போனதை எதிர்த்து வருகின்றனர். இது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாகவுரில் நடந்த தேர்தல் பேரணியில், “காங்கிரஸ் ஆப்ட போது பத்து வருடங்களுக்குள் அலியா, மலியா, ஜமாலியா எனப் பல பெயர்களில் வங்க தேசத்தவர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் புகுந்துள்ளனர். வாக்கு வங்கியை மனதில் கொண்டு அவர்களை அப்போதைய அரசும் கண்டுக் கொள்ளவில்லை.

அவர்களை இனம் கண்டுக் கொள்ள அரசு தேசிய குடியுரிமை பட்டியலை வெளியிட்டது. இதில் சட்ட விரோதமாக நாட்டினுள் புகுந்த 40 லட்சம் பெயர்கள் விட்டுப்போனதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் ராகுல் காந்தியின் தாய் வழியில் ஒன்று விட்ட சகோதரர்கள் என்பதே ஆகும். அதனால் தான் காங்கிரஸார் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களை நாட்டுக்குள் சேர்த்தல் இன்னும் நான்கு இடங்களில் குண்டு வைப்பார்கள்.

எனவே தற்போது ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கும், அடுத்த வருடம் மக்களவைக்கும் பாஜகவை தேர்தெடுக்க வேண்டும். காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையும், கொல்கத்தாவில் இருந்து கட்ச் வரையும் உள்ள அனைத்து சட்ட விரோதமாக நாட்டுக்குள் புகுந்தவர்களையும் கண்டறிந்து விரட்டி அடிப்போம். அதற்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் தான் தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் வேண்டுமென்றே அசாம் குடியுரிமை பட்டியலில் பல குழறுபடிகள் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் பாஜக தேசிய தலைவரின் இத்தகைய பேச்சு மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

You may have missed