மிகவும் தாமதமாக கருத்து சொன்ன டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி: மோடி அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை வரவேற்றுள்ள அதேநிலையில், மக்களுக்குப் பிரச்சினை என்றால் அபராத தொகையை குறைக்கவும் டெல்லி அரசு தயங்காது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தால் டெல்லி மாநகரில் போக்குவரத்து சூழல் மேம்பட்டுள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், அபராதத் தொகையால் மக்கள் இன்னல்களை அனுபவித்தால், அவற்றை குறைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதை நிச்சயம் செய்வோம்” என்றுள்ளார் கெஜ்ரிவால்.

திருத்தப்பட்ட புதிய சட்டத்திற்கு பா.ஜ. ஆளும் மாநிலங்களிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அபராதத் தொகை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது என்று அந்த மாநில அரசு அறிவித்துவிட்டது. மேலும், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் மிக தாமதமாக டெல்லி முதல்வரிடமிருந்து இந்த கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.