சென்னை:

நியூசிலாந்து போல் சென்னையையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை அயனாவரத்தில் கொரோனா தொற்று பரவல் குறித்து, சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனுடன்  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திருவொற்றியூர்-– மணலி – -திரு.வி.க. மண்டலம் பகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. 7 லட்சத்து 77 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். மக்களுக்கு 100 சதவீத விழிப்புணர்வை ஏற்படுத்த இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறோம்.

தெருவாரியாக ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறோம். முதல் அமைச்சரின் வழிகாட்டுதல்படி கபசுர குடிநீர், சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. 2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. திரு.வி.க. நகர் மண்டலத்தை நோய்த்தொற்று இல்லாத மண்டலமாக உருவாக்கி காட்டுவோம்.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து மேலும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் சரியான தகவல் பரிமாறவேண்டும். பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் அணிவித்தல், கை கழுவுதல் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுத்த வேண்டும்.

கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும். கொரோனா பரவலை தடுக்க தெருவாரியாக 100 சதவீத விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமனித இடைவெளி என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.