கொல்கத்தா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாஜக அறிமுகம் செய்துள்ளது.  இந்த மசோதாவின்படி பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதரீதியான துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்துள்ள இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க வழி செயல்பட்டுள்ளது

நேற்று இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு இந்த மசோதா அநீதி இழைப்பதாகக் குற்றம் சாட்டி வருகிறது.

மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவியுமான மம்தா பானர்ஜி, “நீங்கள் அனைத்து பிரிவினருக்கும் குடியுரிமை அளிப்பதாக இருந்தால் நாங்கள் ஒப்புக் கொள்வோம்.,  ஆனால் நீங்கள் மதத்தின் அடிப்படையில் பிரிப்பதால் அதை எதிர்த்துப் போராட உள்ளோம்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் இந்த மசோதாவை நீங்கள் நிறைவேற்ற முடியும்.   ஆனால் நாங்கள் எப்போதும் அதை அனுமதிக்க மாட்டோம்.  இறுதிவரை இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்துப் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.