எங்கள் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் நடக்காது : வங்க தேசம் உறுதி
டாக்கா
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் தங்கள் மண்ணில் நடக்க வங்க தேசம் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வங்க தேசத்துக்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் சென்று இருந்தார். அங்கு அவர் அந்நாட்டு பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். அந்த பேச்சு வார்த்தைகளில் இந்திய – வங்க தேச உறவு, ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகள், இந்தியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றை குறித்து விவாதம் செய்துள்ளனர்.
ராஜ்நாத் சிங் குடன் வங்க தேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் நடத்திய சந்திபில் பயங்கர வாத எதிர்ப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, இரு நாடுகளிலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப்பது. போதை மருந்து மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வங்க தேசம் இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து அசாதுஸ்ஸமான் கான், “இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது. எங்கள் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அது மட்டும் இன்றி இந்திய உட்பட எந்த நாட்டுக்கு எதிராகவும் பயங்கரவாத நிகழ்வுகள் இங்கு நடக்காது என உறுதி அளிக்கிறோம். அத்துடன் இந்தியா மற்றும் வங்க தேசம் இடையே ராணுவ செய்திகளை பகிர்ந்துக் கொள்ள இருநாடுகளும் ஒப்புக் கொண்டது” என தெரிவித்தார்.
டில்லி திரும்பிய ராஜ்நாத் சிங், தனது டிவிட்டரில், “எனது மூன்று நாள் வங்க தேச பயணத்துக்குப் பின் டில்லி திரும்பி உள்ளேன். வங்க தேச மக்களின் வரவேற்பும் அக்கறையும் எனது நெஞ்சை தொட்டது. இந்தியா – வங்க தேச நட்பு நீடுழி வாழ்க” என பதிந்துள்ளார்.