இறுதி முடிவு எடுக்கப்படும்வரை டெல்லி ரயில்பாதை குடிசைகள் அகற்றப்படாது – உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய தலைநகரில் ரயில் பாதைகளின் ஓரங்களில் குடிசைகள் & கூடாரங்கள் அமைத்து வசிக்கும் மக்கள், அரசால் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் வரை அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மோடி அரசு.

டெல்லியின் 140 கி.மீ. நீள ரயில் பாதைகளின் ஒரங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான குடிசைகள் & கூடாரங்கள். அரசின் இந்த அறிவிப்பு, அவர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வின் முன்பாக ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ரயில்வே அமைச்சகம், டெல்லி அரசு மற்றும் மத்திய நகர்ப்புற வளரச்சி அமைச்சகம் ஆகியவைகளுடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ ஏஸ் போபண்ணா, வி ராமசுப்ரமணியன் உள்ளிட்டோரும் அடக்கம்.

டெல்லியின் ரயில் பாதை ஓரங்களில் அமைந்துள்ள 48000 குடிசைகள் & கூடாரங்களை, எந்த அரசியல் தலையீடும் இன்றி, 3 மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டுமென, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.